நிலத்தை இழந்து தொழிலையும் பறிகொடுத்த ஒலுவில் மக்கள்
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒலுவில் பிரதேசமானது இயற்கை எழில் மிக்கதும், ரம்மியமான சூழலைக் கொண்டதுமான ஒரு இடமாகும். இந்தப் பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியானது, அதிக மீன் வளம் கொண்ட ஒரு இடமாகும்.
ஒலுவில் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து அழகு பார்க்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆசைப்பட்டார். அதற்கு அவர் ஒலுவில் மண் மீது கொண்ட நேசமே பிரதான காரணமாகும். அதனாலே தனக்குச் சொந்தமாக ஒரு வீட்டையும் அவர் ஒலுவிலில் அமைத்தார்.
ஒலுவில் பிரதேசத்தினை திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதே அஷ்ரப்பின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்குப் பின்னர் அவருடைய எண்ணங்கள், ஆசைகள் கிடப்பில் போடப்பட்டன. அவர் விட்டுச் சென்ற பணியை முறையாக முன்னெடுத்துச் செல்ல எவரும் இதுவரை முன்வரவில்லை. அதனாலே ஒலுவில் பிரதேசம் இன்று பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
மேற்குறித்த பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக ஒலுவில் பிரதேசம் சர்வதேச ரீதியாக பேசப்படுவது பெருமையாக இருந்தாலும், ஒலுவில் மக்களின் அவலக்குரல் இன்று ஒலித்துக் கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகிறது.
விவசாயம், மீன்பிடி என்பன இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில்களாக இருப்பதுடன், ஒரு காலத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பேர்பெற்ற இடமாக ஒலுவில் கடற்கரைப் பகுதி காணப்பட்டது. நூற்றுக்கணக்கான தோணிகளும், இயந்திரப் படகுகளும் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஆழ்கடல் மற்றும் கரைவலை என மீன்பிடித் தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வந்தனர்.
1998ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதிய அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம், அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சர் எம். எச். எம். அஷ்ரப், ஒலுவில் துறைமுகத்தை அறிவித்தார். ஒலுவில் துறைமுகத்தை அமைக்க 46.1 மில்லியன் யூரோவை வட்டியில்லாக் கடனாக டென்மார்க் அரசு இலங்கைக்கு வழங்கியதுடன், ஒலுவில் துறைமுக வளாகத்திற்குள் வர்த்தகம் மற்றும் மீன்பிடி தேவைகளுக்கென இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒலுவில் துறைமுகமானது 2013ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இன்று அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் தினமும் நிம்மதியற்றும் கவலையோடும் தமது பொழுதைக் கழித்து வருவது வேதனையான விடயமாகும்.
இந்தத் துறைமுகத்தை அமைக்க பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 125 ஏக்கர் பரப்பளவுள்ள காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும் முறையான நட்டஈடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுமில்லை. அத்துடன் இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட காணி உரிமையாளர்களில் சிலருக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதாதென்றும் கூறுகின்றனர்.
ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னரும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கையினாலும் ஒலுவில் பிரதேச மீனவர்களுடைய மீன்பிடித் தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அத்துடன் ஒலுவில் பிரதேசத்தை அண்டிய பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒலுவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி அம்மக்களுடைய வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியும் வருகின்றனர்.
குறித்த துறைமுக நிர்மாணத்தின் பின்னர் ஒலுவில் பிரதேசத்தில் ஆரம்பமான பாரிய கடலரிப்பினால் அப்பிரதேசத்தின் காணிகளையும், ஆயிரக்கணக்கான தென்னை மரங்களையும் கடல் காவு கொண்டுள்ளது. இந்த தென்னை மரங்களிலிருந்து கிடைத்த தேங்காய் மற்றும் ஏனைய பொருட்கள் மூலம் வருமானம் பெற்று வந்தவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலரிப்பைத் தடுப்பதற்காக கடலின் உள்ளேயும், கரையிலும் பெரிய பாறாங்கற்கள் போடப்பட்டுள்ளதால், மீனவர்களின் தோணிகள், வள்ளங்கள், கடலுக்குள் சென்று வருவதில் பல்வேறு சவால்களுக்கு மீனவர்கள் முகம்கொடுத்து வருகின்றனர். பல தடவைகள் வள்ளங்களும் இயந்திரங்களும் சேதமடைந்ததுடன், உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு எந்தவொரு நஷ்டஈடும் இதுவரை வழங்கப்படவில்லை என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்..
துறைமுகம் ஒன்றை நிறுவிய பின்னர்தான் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் அங்கலாய்க்கின்ற வேளையில், இப்பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அவர்கள் பல தடவை போராட்டங்களையும் நடாத்தியுள்ளனர். ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது மீனவர்களுடைய நீண்ட கால குற்றச்சாட்டாகும்.
ஒலுவில் துறைமுகம் வர்த்தகத் துறைமுகம் மற்றும் மீன்பிடித் துறைமுகம் என இரு பிரிவுகளை கொண்டிருந்தாலும், வர்த்தகத் துறைமுகம் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. மீன்பிடித் துறைமுகம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகின்ற போதும் அதன் நுழைவுப் பாதையை அடிக்கடி மண் மூடிவிடுவதால் அங்கு தங்கி நிற்கும் படகுகள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கப்பல் இத்துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு அதன் படகுப் பாதை மண்ணை அகற்றும் வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதிலும் இக்கப்பல் மூலம் மண்ணை அகற்றும் பணி ஒரு சில தினங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில் இக்கப்பல் தரித்த நிலையிலேயே காணப்பட்டது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மீனவர்கள் வினவியபோது கப்பலுக்கான எரிபொருள் நிரம்பும் வகையில் தமக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படாததன் காரணமாக வேலையினை தொடந்தும் மேற்கொள்ள முடியாமல் உள்ளதென தெரிவிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவுப் பாதையை மூடுகின்ற மண்ணை அகற்றுவதற்கு ஏட்டிக்குப் போட்டியாக அரசியல்வாதிகள் காலத்துக்கு காலம் ஒலுவிலுக்கு விஜயம் செய்வதும் ஒரு வழக்கமாகி விட்டது. ஆனாலும் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் யாரும் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை.
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றவர்களும், துறைமுகத்திற்கு வெளியில் மீன்பிடித்தொழில் ஈடுபடுபவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
ஏ.எல். றியாஸ்
(பாலமுனை விசேட நிருபர்)
(பாலமுனை விசேட நிருபர்)
Taked From - http://www.thinakaran.lk
No comments