லசித் மாலிங்க ஒரு வருடத்தின் பின் இலங்கை அணியில்
வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக எவ்வித சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் இணைத்துக் கொள்ளப்படாத லசித் மாலிங்க, எதிர்வரும் செப்டெம்பர் 15 முதல் 28 ஆம் திகதி வரை, துபாயில் இடம்பெறவுள்ள ஆசியா கிண்ண தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.
லசித் மாலிங்க இறுதியாக, கடந்த வருடம் (2017) செப்டெம்பர் மாதம் சர்வதேச போட்டியொன்றில் விளையாடியதைத் தொடர்ந்து, அவர் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 இல் இந்திய அணியுடன், செப்டெம்பர் 03 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு நாள் போட்டி, அதனைத் தொடர்ந்து செப்டெம்பர் 06 இல் இடம்பெற்ற ரி20 போட்டிகளே அவர் இறுதியாக விளையாடிய சர்வதேச போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமையிலான 16 பேரைக் கொண்ட அணியில் அவரது பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லசித் மாலிங்க, சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவிப்பதற்காக ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த நிலையில் இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இடம்பெற்று வரும் இலங்கை உள்ளூர் அணிகளுக்கிடையிலான 'இலங்கை கிரிக்கெட் ரி20' (SLCT20) லீக் தொடரில் விளையாடி வரும் 35 வயதான லசித் மாலிங்க, இத்தொடரை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லசித் மாலிங்க கடந்த 2010 இல் டெஸ்ட்போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்திருந்தார்.
தற்போது இலங்கையில் இடம்பெற்றுவரும் உள்ளூர் ரி20 போட்டிகளிலும் அவர் முன்பு போன்று விளையாடவில்லைஎனவும், அவ்வளவாக சோபிக்கவில்லை எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான சம்பவத்துடன் தொடர்புபட்டமை தொடர்பில், ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டு, இலங்கை கிரிக்கெட் சபையினால் 06 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட சகல துறை ஆட்டக்காரரான, தனுஷ்க குணதிலக்க இக்குழாமில் இடம்பெற்றுள்ளார்.
அத்துடன், கடந்த வருடம் ஏப்ரலில் இறுதியாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடிய சுழல் பந்துவீச்சாளர் தில்ருவன் பெரேரா மற்றும் இவ்வருடம் ஏப்ரலுக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் இடம்பிடிக்காத, வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவும் இக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி: அஞ்சலோ மெத்திவ்ஸ் (தலைவர்) , குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக்க, திசர பெரேரா, தசுன் சானக, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, தில்ருவன் பெரேரா, அமில அபோன்சோ, கசுன் ராஜித, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க
Taken From - http://www.thinakaran.lk
No comments