Lover who stole girlfriend's money in cinematic style
சினிமா பாணியில் காதலியின் பணத்தை திருடிய காதலன்
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தனது காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபாவை திருடிய காதலன் தலைமறைவாகியுள்ளார்.
கையடக்க தொலைபேசி மூலம் ஒரு வாரமாக காதலித்து வந்த கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண், நபர் ஒருவரை தொலைபேசி மூலம் ஒருவார காலமாக காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து இருவரும் கொழும்பிலிருந்து திருகோணமலையை சுற்றிப் பார்க்க காரில் சென்றுள்ளனர்.
திருகோணமலை, அலஸ் தோட்டம் பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இரவு வேளையில் இருவரும் மது அருந்தி விட்டு உறங்கியுள்ளனர்.
பின்னர் மறுநாள் காலை எழும்பிப் பார்த்த போது காதலரை காணவில்லை எனவும், தன்னிடம் இருந்த 16 இலட்சம் பணத்தை திருடி விட்டு சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண்ணிடம் அழைத்து வந்தவரின் கையடக்க தொலைபேசி மாத்திரமே இருந்ததாகவும் அவர் பற்றிய விபரங்கள் அதில் இல்லை எனவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உப்புவெளி பொலிஸார் அந்த முறைப்பாட்டை அடுத்து ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையடக்கத் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்சப், வைபர் மற்றும் இணையங்களின் மூலம் காதலிக்கும் பெண்கள், ஆண்கள் விடயத்தில் கவனமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments