அச்சு ஊடகம் மூலம் விடுதலை வேட்கையை விதைத்த டி.ஆர்
இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடியும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும், இலங்கையின் தேசிய வீரருமான அமரர் டி.ஆர்.விஜேவர்தன அவர்களின் 132 வது ஜனன தினம் இன்றாகும்( 23.02.2018).
இன்றைய காலகட்டத்தில் உலகின் மாபெரும் சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் வெகுஜன ஊடகத் துறையின் முக்கியத்துவத்தையும் பலத்தையும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலேயே இலங்கையில் புரிந்து கொண்டவர்களில் டி. ஆர். விஜேவர்தன முக்கியமானவராவார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர், நாடு திரும்பியதும் வழக்கறிஞராகப் பொதுவாழ்வில் பிரவேசித்தார். சொற்ப காலத்தில் அச்சு ஊடகத்துறையில் பிரவேசித்த இவர், பத்திரிகைகளின் உரிமையாளராக மாறினார். ஊடகத் துறையின் ஊடாக மக்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் நாட்டிலும் பாரிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்த முடியும் என்பதை அவர் அன்றே உறுதியாக நம்பினார். அந்தடிப்படையில் இந்நாட்டின் சுதந்திரத்திற்கும், மேம்பாட்டுக்கும் அச்சு ஊடகத்துறையின் ஊடாக அளப்பரிய பங்களிப்புகளை நல்கியவர் டி.ஆர்.விஜேயவர்தன.
இவ்வாறு சிறப்புற்று விளங்கும் இந்நாட்டு அச்சு ஊடகத் துறையின் முன்னோடியான டி.ஆர். விஜேவர்தன, 1886 பெப்ரவரி 23 ஆம் திகதி பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியை சேதவத்த பாடசாலையிலும், இரண்டாம் நிலைக்கல்வியை முகத்துவாரம் சென் தோம்ஸ் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டதோடு, பிரித்தானியா சென்று கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இணைந்து கற்று பரிஸ்டர் பட்டம் பெற்றார்.
அங்கு கல்வியை நிறைவு செய்து கொண்டு 1912 இல் நாடு திரும்பிய இவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சத்தியப் பிரமாணம் செய்து புதுக்கடையில் சட்டத்தரணியாக பொதுவாழ்வை ஆரம்பித்தார்.
அவர் சொற்ப காலத்தில் அச்சு ஊடகத் துறையில் பிரவேசித்தார். அவரது அச்சு ஊடகத்துறை பிரவேசத்தை எடுத்து நோக்கும் போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அச்சு ஊடகத்தைப் பெரிதும் பயன்படுத்த முடியும் என அவர் பெரிதும் நம்பினார்.
அந்தடிப்படையில் 1909 முதல் எச்.எஸ் பெரேராவினால் வெளியிடப்பட்டு வந்த 'தினமின' பத்திரிகையை, அவரது மறைவைத் தொடர்ந்து 1914 டிசம்பரில் கொள்வனவு செய்து டி.ஆர். விஜேவர்தன வெளியிடத் தொடங்கினார். அதனூடாகக் கிடைக்கப் பெற்ற வரவேற்பு, ஆதரவு என்பன அவர் இத்துறையில் பரந்தடிப்படையில் கால்பதிக்க வழிவகுத்தன. அந்தப் பின்னணியில் ஆங்கில மொழியிலும் பத்திரிகையொன்றை வெளியிட விரும்பிய இவர், 1918 முதல் 'சிலோன் டெய்லி நியூஸ்' பத்திரிகையைத் தொடங்கினார்.
பிரித்தானிய ஆக்கிரமிப்பின் கீழிருந்த இலங்கையில் 'தினமின', 'சிலோன் டெய்லி நியூஸ்' பத்திரிகைகளுக்கு கிடைக்கப் பெற்ற ஆதரவு, வரவேற்பு காரணமாக இப்பத்திரிகைகளுக்கான தனியான கட்டமைப்பாக 'அசோஸியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட்' நிறுவனத்தை டி.ஆர். விஜேவர்தன நிறுவியதோடு, அந்நிறுவனத்தை அவர் 1926 இல் கூட்டிணைப்பு செய்தார். 1932 இல் 'தினகரன்' தமிழ் தேசியப் பத்திரிகையையும் ஆரம்பித்தார்.
இவற்றின் ஊடாக இலங்கை வரலாற்றில் ஒரு நிறுவனத்தின் மூலம் மூன்று மொழிகளிலும் தனித்தனி தினசரி பத்திரிகைகளை வெளியிடும் பராம்பரியத்தைத் தொடக்கி வைத்தவர் என்ற பெருமையை டி.ஆர். விஜேவர்தன பெற்றுக் கொண்டார். இந்நாட்டு மக்களின் சுதந்திர வேட்கையையும், அது தொடர்பான நடவடிக்கைகளையும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு மாத்திரமல்லாமல் நாட்டில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசும் மக்களுக்கும் கொண்டு செல்லவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே அவர் விரும்பினார். அதாவது அரசியல் விடுதலையைப் பெற்றுக் கொள்வதே அவரது பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது.
இது தொடர்பில் ஒரு முறை கருத்துத் தெரிவித்த டி.ஆர். விஜேவர்தன, 'சொத்துக்களை அடைந்து கொள்வதற்காக நான் பத்திரிகைக் கலையில் பிரவேசிக்கவில்லை. பணம் தேட வேண்டிய தேவை இருப்பின் அதற்கு பத்திரிகைத் துறையை விடவும் வேறுபல துறைகள் உள்ளன. எனினும் நான் பத்திரிகைத் துறையில் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றேன். பொதுமக்கள் சேவையும், தேசிய அபிவிருத்தியும் தான் எனது பத்திரிகைக் கலையின் நோக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் 1918 ஜனவரி 3 ஆம் திகதி வெளியான டெய்லி நியூஸ் பத்திரிகையின் முதலாவது வெளியீட்டில் இப்பத்திரிகையின் கொள்கை குறித்து டி.ஆர். விஜேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
'எமது வரலாற்றை அநேகர் அறிவர். என்றாலும் அதில் தெளிவில்லாத ஒரு இடமுள்ளது. அது தான் எமது பொறுப்பாகும். எந்தவொரு தரப்பினரதும் உணர்வுகளைத் திருப்திப்படுத்தவோ அல்லது ஒரு தரப்பினருடன் நட்பு கொள்ளவோ அல்லது குழுவாதத்தை கட்டியெழுப்பவோ நாம் பத்திரிகை நடாத்தவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு நபரின் அல்லது அந்நபரோடு தொடர்பான விஷேட தேவைகளை நிறைவேற்றவும் நாம் இப்பத்திரிகையை ஆரம்பிக்கவில்லை. அதனால் குலம், கோத்திரம், சமயம் மற்றும் வர்க்கம் குறித்த எவ்வித உணர்வும், வேறுபாடுகளும் இன்றி சகல மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர் இப்பத்திரிகையில், 'மக்களின் தேவை, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்துவதற்கு இப்பத்திரிகை ஊடகம் நேர்மையாகவும், தூய்மையாகவும் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படுவதை நான் பெரிதும் விரும்புகின்றேன். மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் குறித்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, மக்கள் முகம் கொடுக்கின்ற ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான பேருதவியாக நாம் பத்திரிகைகளைப் பயன்படுத்துவோம். அது தான் எமது நோக்கம். அந்நோக்கத்தை நிறைவேற்றுவத்காக நாம் முழு மனதுடன் அர்ப்பணிப்போடு செயற்படுவோம்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பமான பௌத்த மறுமலர்ச்சி இயக்கம், மது ஒழிப்பு இயக்கம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் தோற்றம் பெற்ற தொழிலாளர் இயக்கம் என்பவற்றுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும் வகையில் தம் பத்திரிகைகளை அவர் முன்னெடுத்தார். குறிப்பாக அக்காலப்பகுதியில் இடம்பெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம், ரஷ்யா, எகிப்து, அயர்லாந்து, துருக்கி, சீனா போன்ற நாடுகளில் இடம்பெற்ற புரட்சி மற்றும் கலகங்கள் குறித்த செய்திகள், பிரித்தானிய உள்ளிட்ட பல நாடுகளில் கைத்தொழில் மயமாக்கலை விரும்பாத தரப்பினர் மற்றும் அந்தந்த நாடுகளில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் என்பவற்றைத் தம் பத்திரிகைகளில் தினசரி வெளியிட்டார். இதன் பயனாக இந்நாட்டு தொழிலாளர்களில் பெரும்பகுதியினரின் அபிமானம் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றாக 'தினமின' மாறியது.
அதேநேரம் இந்நாட்டுக்கெனப் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அடிக்கடி கட்டுரைகளையும் செய்திகளையும் தம் பத்திரிகைகள் வெளியிடவும் அவர் ஏற்பாடு செய்தார். குறிப்பாக டொனமூர் அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட போது தோற்றம் பெற்ற நாட்டுக்கு ஒவ்வாத ஒவ்வொரு சம்பவத்தையும் இவரது பத்திரிகைகள் வெளியிடத் தவறவில்லை.
மேலும் அரசியலில் ஜனநாயகத்தின் நண்பராகத் திகழந்த பத்திரிகை வெளியீட்டாளரான டி.ஆர். விஜேவர்தன பொதுமக்களின் நலன்களை அடிப்படை நோக்காகக் கொண்டு இந்நாட்டுக்கெனப் பல்கலைக்கழகமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளையும் தம் பத்திரிகைகள் ஊடாக முன்னெடுத்தார். இந்நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கற்றறிந்தவர்களை உருவாக்குவதற்காக உள்நாட்டில் உயர் கல்வி நிறுவனமொன்றின் தேவையைப் புரிந்து கொண்ட டி. ஆர். விேஜவர்தன இலங்கையின் கலாசார பாரம்பரியங்களுக்கு அமைவான பல்கலைக்கழகமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
1921 இல் அப்போதைய இலங்கைக்கான ஆளுநராக இருந்த ரொபட் சார்மஸ் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியை ஆரம்பித்த போதிலும் அது ஒரு முழுமையான பல்கலைக்கழகமாக இருக்கவில்லை. அதனால் இலங்கைக்கென முழுமையான பல்கலைக்கழகமொன்றைப் பெற்றுக் கொள்ளவென மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் தினமின, டெய்லி நியூஸ் பத்திரிகைகளில் தொடராகக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
பல்கலைக்கழகக் கோரிக்கை வளர்ச்சி பெற்று வந்ததைத் தொடர்ந்து இலங்கையில் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான யோசனை அரச பேரவையில் நிறைவேற்றப்பட்டது. என்றாலும் அப்பல்கலைக்கழகத்தை கொழும்பிலா அல்லது கண்டியிலா அமைப்பது தொடர்பில் கற்றறிந்தவர்கள் மத்தியில் முரண்பாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து நின்று வாதிட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் டி.ஆர். விஜேவர்தன அப்பல்கலைக்கழகத்தை பேராதனையில் அமைக்க வேண்டும் என்பதை ஆதரித்தார். அந்த யோசனைக்கு அமைய அது அங்கு அமைக்கப்பட்டது.
இவ்வாறு இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் மேம்பாட்டுக்காகவும் பத்திரிகைகளைக் கொண்டு அளப்பரிய பங்களிப்புக்களை நல்கிய டி.ஆர் விஜேவர்தன, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணியபடி அரசாங்கத்திற்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் தம் பத்திரிகைகள் ஊடாக வழங்கினார். அவற்றை ஏற்றுக் கொள்ளவும் அன்றைய அரசு தவறவில்லை.
நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும் பத்திரிகைகள் ஊடாக மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக அளப்பரிய சேவைகள் ஆற்றி வந்த டி.ஆர் விஜேவர்ன 1950 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13 ஆம் திகதி காலமானார். அவர் இந்நாட்டுக்காக ஆற்றியுள்ள சேவைகள் இந்நாட்டு வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன. அதன் பயனாக என்றும் நினைவு கூரப்படும் நபராகத் திகழ்கின்றார் டி.ஆர். விஜேவர்தன.
மர்லின் மரிக்கார்
No comments